நமது
நாட்டில் பணத்தை நிர்வாகம் செய்யும் ரிசர்வ் வங்கியில் கல்லூரி மாணவர்கள்
யங் ஸ்காலர் திட்டத்தின் கீழ் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பயிற்சி
பெறலாம். இந்தப் பயிற்சி பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம்
ரூ.7,500வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இந்தப் பயிற்சி பெற
தகுதியுடைய மாணவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு
செய்யப்படுகிறார்கள். ரிசர்வ் வங்கியில் பயிற்சி பெற விரும்பும் கல்லூரி
மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
ரிசர்வ்
வங்கி நமது நாட்டில் பணத்தை நிர்வாகம் செய்கிறது. ரூபாய் நோட்டுகளை
வடிவமைப்பதில் அரசுடன் சேர்ந்து பணியாற்றுகிறது. எந்தெந்த ரூபாய்
நோட்டுகள் எவ்வளவு தேவைப்படுகின்றன என்பதை மதிப்பிட்டு இந்திய அரசின்
மூலம் செக்யூரிட்டி பிரஸ்களுக்கு தேவைப் பட்டியலை அளிக்கிறது.
அச்சகங்களிலிருந்து பெறப்படும் பணத்தாள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன.
புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் தரத்தைப் பாதுகாக்கும் வகையில்
அழுக்கடைந்த, சேதமடைந்த நோட்டுகள் அழிக்கப்படுகின்ன...இப்படி ரிசர்வ்
வங்கியைச் சுற்றி நிதி தொடர்பான பல பணிகள் நடைபெறுகின்றன. 1934ஆம் ஆண்டில்
உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்தியாவின் மத்திய வங்கியாகச்
செயல்படுகிறது. இந்திய வங்கித் துறையின் செயல்பாடுகள் குறித்து கல்லூரி
மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கல்லூரியில் படிக்கும்
மாணவர்களுக்கு ‘யங் ஸ்காலர்ஸ் அவார்டு ஸ்கீம்’ என்ற திட்டத்தை ரிசர்வ்
வங்கி அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின்
கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை
நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். தேர்வு செய்யப்படும்
மாணவர்கள் ரிசர்வ் வங்கியில், அதன் மண்டல மையங்களில் இரண்டு அல்லது மூன்று
மாத காலம் வரை பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். அந்தந்த மண்டல
மையங்களின் இயக்குநர் மேற்பார்வையில் குறிப்பிட்ட திட்டங்களில் பயிற்சி
பெறலாம். அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், சண்டீகர், சென்னை,
குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ,
மும்பை, நாக்பூர், புதுடில்லி, பாட்னா, புனே, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா,
திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மாணவர்கள் தங்களது புராஜக்ட்டுகளை
மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தங்களது பயிற்சிக் காலத்தில்
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ளும்
வாய்ப்பும் கிடைக்கும்.
இந்தப் பயிற்சியில் சேர என்ன தகுதி இருக்க வேண்டும்?
அங்கீகரிக்கப்பட்ட கல்வி போர்டுகளில் பிளஸ் டூ படித்து முடித்து விட்டு
பல்கலைக்கழகங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ இளநிலைப் பட்டப் படிப்பு
படிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே
பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியாது. யங்
இந்தியா ஸ்காலர்ஸ் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே விண்ணப்பித்து பயிற்சி
பெற்றவர்கள் மீண்டும் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியாது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு செப்டம்பர்
முதல் தேதியன்று 18 வயது ஆகி இருக்க வேண்டும். அதேசமயம், 23 வயதுக்கு மேல்
ஆகி இருக்கக்கூடாது.
மாணவர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ் 150 மாணவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள். அதில் 50 மாணவர்கள் ஆங்கில வழியில் நடத்தப்படும்
எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள்
பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு, ஜனவரி 29ம் தேதி
நடைபெறும். சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்பட 105
இடங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில்
மட்டுமல்லாமல், தமிழிலும் எழுதலாம். இதுதவிர, இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி,
குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது
ஆகிய மொழிகளிலும் எழுதலாம். இந்தத் தேர்வு அப்ஜெக்ட்டிவ் முறையில்
இருக்கும். தேர்வு நேரம் 90 நிமிடங்கள். இந்தியாவில் வங்கித் துறை,
பொருளாதாரம், நிதித்துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் இதில் இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கைகள், வங்கித்துறை வளர்ச்சி குறித்த
அறிக்கைகள் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கொடுக்கப்பட்டுள்ள
பதில்களில் எது சரியான பதில் என்பதை மாணவர்கள் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள்,
விவரங்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் ரிசர்வ் வங்கி இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பார்த்து மாணவர்கள் இந்தத் தேர்வுக்குத்
தயாராகலாம்.
இந்தப்
பயிற்சியில் சேர மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப எந்தக்
கட்டணமும் கிடையாது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இ-மெயில் ஐ.டி. இருக்க
வேண்டியது அவசியம். ரிசர்வ் வங்கி இணைய தளத்தைப் பார்த்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க வேண்டும். தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்படும்
விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை டிசம்பர் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும். இந்த எழுத்துத் தேர்வு எழுதுவதற்கான அழைப்புக் கடிதத்தை ஜனவரி
12ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம். அந்த
அழைப்புக் கடிதத்தில் விண்ணப்பதாரரின் புகைப்படத்தை ஒட்டி அதில்
விண்ணப்பதாரர் தனது கையெழுத்திட வேண்டியது அவசியம். ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி இணையதளத்தில்
விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்
சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள் உள்ளிட்ட அனைத்து
விவரங்களையும் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொல்ளலாம்.
நாட்டில்
உள்ள பணத்தை மேலாண்மை செய்யும் ரிசர்வ் வங்கியில் போய் பயிற்சி பெறுவது
என்பது அரிய வாய்ப்பு இல்லையா? இந்திய வங்கித்துறை நடைமுறைகளைப் பற்றி
நேரடியாகத் தெரிந்துகொள்ள இது உதவும். இதற்குப் பயிற்சிக் கட்டணம் எவ்வளவு
என்று கேட்கிறீர்களா? எந்தக் கட்டணமும் கிடையாது. பயிற்சி பெறும்
மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சிக்
காலத்தில் தங்கும் இட வசதி இல்லாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு
தங்குவதற்கு உரிய வசதிகளையும் ரிசர்வ் வங்கியே செய்துதரும். ரிசர்வ்
வங்கியின் யங் ஸ்காலர்ஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் கல்லூரி
மாணவர்கள் இப்போதே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
|